ரேசன் கடைகளில் எப்போது சரியான எடைக்கு பொருட்கள் கிடைக்கின்றதோ, அப்போது தான் தமிழகம் ஊழலில்லாத மாநிலம் என்ற அந்தஸ்தை பெறும் என்று சொன்னால் அது மிகையாகாது. 5 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் 3.50 லிட்டர் தான் இருக்கும். 5 கிலோ அரிசி வாங்கினால் 4 கிலோ தான் இருக்கும்.
இப்படி பல பொருட்களும் எடை குறைவாகவே இன்றும் வழங்கப்படுகின்றன. அதிகாரிகளின் ஊழல் ஒருபுறம், ரேசன் கடை ஊழியர்களின் முறைகேடு மற்றொரு புறம் என மக்களை சுரண்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தற்போது கோவை உள்ளிட்ட இடங்களில் ரேசன் கடைகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. விற்பனையில் டிவைஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ என்னும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வந்த உடன் அப்டேட் செய்யப்படும்.
குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை வாங்கியதாக கருவியில் அவர்களது எண்ணுடன் பதிவு செய்யப்பட்டால், அந்த விபரம் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக செல்வதுடன், அந்த கருவியிலும் இருப்பு குறைந்து விடும். இந்த முறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ரேசன்கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும் போதே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாகத்தான் அனுப்பப்படுகிறதாம். துவரம் பருப்பு என்றால் 50 கிலோவிற்கு 48 கிலோ தான் இருக்குமாம். சாக்கின் எடையான 650 கிராமையும் கழிப்பதில்லையாம்.
அதே போல் ரேசன் கடைகளில் உள்ள பெருச்சாளிகள் சாப்பிட்டது போக, பொதுமக்களுக்கு வழங்கும் போது, பற்றாக்குறை ஏற்படுகிறதாம். இதனால் கருவியின் கணக்குப்படி, சில கிலோக்கள் இருப்பு இருக்குமாம். இதனால் ரேசன் கடை ஊழியர்கள் நடவடிக்கையை சந்திக்க வேண்டியதாக உள்ளதாம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.