புதன், 28 செப்டம்பர், 2016

கோவை வன்முறைகள் : அந்த இராமதாசும் இந்த இராமதாசும்.

Source; FB Marx Anthonisamy
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கோவையில் சசிகுமார் கொலையை ஒட்டி இந்துத்துவ அமைப்புகள் அவிழ்த்து விட்ட வன்முறைகள் குறித்த டாக்டர் இராமதாசின் அறிக்கையைப் பார்த்தேன்.
சசிகுமார் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொலையாளிகளை உடன் கண்டுபிடிக்க வேண்டும் என்றுள்ளார். நல்லது. நமக்கும் அதே கருத்துதான்.
அடுத்து அவர் காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறார். தொடர்ந்து இந்து முன்னணி ஊழியர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது காவல்துறை பொறுப்பற்று நடந்துகொண்டதன் விளைவே இத்தனைக்கும் காரணம் என்கிறார். இந்து முன்னணி 'பந்த்' அறிவித்த பின்னாவது காவல்துறை வழிபாட்டுத் தலங்களுக்கேனும் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டாமா என்கிறார். இரண்டு வன்முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியதுதான் என்கிறார். இதன் பொருள் ஒன்றின் எதிர்வினையாக இன்னொன்று நடந்தது என்பதுதான். சசிகுமாரின் கொலைக்கு என்ன பின்னணி என இது வரை அறியாத நிலையில் தொடர்ந்து இந்துமுன்னணித் தலைவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த வரிசையில் சசிகுமார் கொல்லப்பட்டதாகவும் அதற்கு எதிர்வினையாக அவர்கள் இப்படி அதிக அளவில் முஸ்லிம் கடைகளைத் தாக்கியதாகவும்...
"இந்தியாவின் மான்செஸ்டர் எனப் புகழ் பெற்ற தொழில்நகரமாகிய கோவையின் பொருளாதார வளர்ச்சியை இந்த மாதிரிக் கலவரங்கள் அழிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என இறுதியாக முடித்துக் கொள்கிறார்.
கோவையின் பொருளாதார மேம்பாட்டில்தான் மருத்துவருக்கு எத்தனை அக்கறை..
ஏதோ இரண்டு தரப்பினரும் சம அளவில் நின்று ஒருவரோடு ஒருவர் மோதி கடைகள் தாக்கப்பட்டது போல அவரது அறிக்கை அமைகிறது. தாக்கிய வன்முறையாளர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டிக்க அவர் மனம் ஒப்பவில்லை.
ஒன்றை இங்கே நான் நினைவூட்ட வேண்டியுள்ளது. கோவை யில் வன்முறைகள், தொடர் வெடிகுண்டு வெடிப்புகள் நடந்து இப்போது 20 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த வன்முறைகளுக்கு முன்னதாக கோவையில் முஸ்லிம்கள் வசிக்கும் கோட்டைமேடு பகுதியின் நுழை வாயிலில் செக்போஸ்டுகள் அமைத்து முஸ்லிம்கள் அவ்வளவு பேரும் குற்றவாளிகள் போல கண்காணித்து இழிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. நாங்கள் அப்போது ஒரு உண்மை அறியும் குழு அமைத்து அந்த செக்போஸ்ட் நீக்கப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருந்தோம்.
அப்போது மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இப்படி செக்போஸ்ட் வைத்து முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவதைக் கடுமையாகாகக் கண்டித்ததோடு, அப்படி அவை நீக்கப்படாவிட்டால் தானே அங்கு வந்து அவற்றை உடைத்து எறிவதாக அறிவித்தார். அந்தக் கூற்று அன்று தமிழகத்தையே அதிரடித்தது. அப்போது அது மிகப் பெரிய அளவில் எல்லோராலும் வரவேற்கப்பட்டது.
அதன் பின் தேர்தல் வந்தது. முடிந்தவுடன் செக்போஸ்டை அரசே அகற்றியது.
அது அப்போதைய டாக்டர் இராமதாஸ். பழனிபாபாவுடன் கரம்கோர்த்துச் செயல்பட்ட இராமதாஸ். ஒரு தலித்தை முதலமைச்சர் ஆக்குவேன் எனச் சொன்ன இராமதாஸ் அது.
இது இன்றைய இராமதாஸ். முஸ்லிம் கடைகளைப் பெரிய அளவில் அழித்த வன்முறையாளர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டிக்க இயலாத இராமதாஸ். பா.ஜ.கவின் கூட்டணித் தோழர் இராமதாஸ். ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பை உருவாக்கும் இராமதாஸ்.