கீழடியில் ஆராய்ச்சி தொடருமா?
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
தமிழகத்தில் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மதுரைக்கு அருகில் இதுவரை ஐந்து இடங்களில் இம்மாதிரி அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
1880ல் அலெக்ஸாண்டர் ரீ என்பவர் அனுப்பானடி, பரவை ஆகிய இடங்களிலும் 1973ல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த எல்.கே. ஸ்ரீநிவாசன் டி. கல்லுப்பட்டியிலும் 1980ல் மாநிலத் தொல்லியல் துறை ராமநாதபுரம் கடற்பகுதியை ஒட்டியுள்ள அழகன் குளத்திலும் 1984-85ல் மாநில தொல்லியல் துறை மதுரை நகரை ஒட்டியுள்ள கோவலன் பொட்டலிலும் 1990ல் மாநில தொல்லியல் துறை மாங்குளத்திலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டன.

இந்த இடங்களில், அழகன் குளத்தைத் தவிர, பிற இடங்கள் எல்லாமே இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களாக இருந்தன. மக்கள் வாழ்ந்த இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வைகை நதியின் கரைகளில் இருந்திருக்கக்கூடிய நாகரீகத்தை ஆராய்வதற்காக நதியின் இரு பக்கங்களிலும் ஆய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது. இதற்காக வைகை பாயும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நதியின் இரு கரைகளிலும் இருக்கக்கூடிய தொல்லியல் மேடுகளை ஆராய முடிவுசெய்யப்பட்டது.
இதற்கென நதியின் இருபுறங்களிலும் கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்கிறார் கீழடி ஆய்வை மேற்கொண்டிருக்கும் கண்காணிப்பு அகழ்வாராய்ச்சியாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா.
இந்தத் தொன்னூறு இடங்களில் கீழடி, சித்தர்நத்தம், மாறநாடு என மூன்று இடங்கள் உறுதியான தொல்லியல் எச்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டன.
இந்த மூன்று இடங்களில் கீழடியில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள பிறகு முடிவுசெய்யப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்புக்கு பானை ஓடுகள் சிதறிக் கிடந்ததும் பெரிய அளவிலான பழங்கால சுட்ட செங்கக்கற்கள் கிடைத்தும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்ய காரணமாக அமைந்தது.