வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?


பிஜே பதில் :
இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.
எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.
இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது.
இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை.
இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!
ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்.
நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 8)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.
அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம்.
அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம்.
இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது.
அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை.
உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள்.
நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது.
ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது.
ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும்.
அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.
ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது.
அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.
அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தாக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால்,
அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான்.
அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்..
பாகிஸ்தான்_நமக்கு_எதிரி_நாடுதான்.
Source: TNTJ