புதன், 5 ஏப்ரல், 2017

ஓட்டுநர் உரிமம் குறித்த மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து! April 04, 2017

ஓட்டுனர் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்காவிட்டால் கூடுதல் கட்டணம் அபராதமாக விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்து கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், குறித்த காலத்தில் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்காவிட்டாலோ, வாகனங்கள் விற்கும் போது ஆட்சேபமில்லா சான்றை தாமதமாக சமர்ப்பித்தாலோ கூடுதல் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை எதிர்த்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, கூடுதல் கட்டணத்தை அபராதமாக விதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறப்பு சேவை எதையும் வழங்கவில்லை என்றும், மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி கட்டணம் மட்டுமே விதிக்க வழி வகுக்கிறது என்றும் கூறினர். 

எனவே எந்த அதிகாரமும் இன்றி கூடுதல் கட்டணம் விதிக்க பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

Related Posts: