சனி, 8 ஏப்ரல், 2017

இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீதிகிடைக்காத தமிழர்களின் படுகொலை! April 08, 2017

திருப்பதியில் செம்மரம் கடத்த வந்ததாக கூறி 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளதால், அங்கு அரிய பல மூலிகைகளும், விலை மதிக்கத்தக்க மரங்களும் உள்ளன. இதனை அறிந்த சமூக விரோதிகள் சிலர் அதனை வெட்டி வெளிநாட்டிற்கு கடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திட்டத்தை தீட்டும் ஆந்திர வியாபாரிகள், திட்டத்தை செயல்படுத்த களத்தில் இறக்குவது என்னமோ வறுமையில் வாடும் அப்பாவி தமிழர்களை தான்.

2015ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது அந்த கோர சம்பவம். பறவைகளை சுட்டு விழ்த்துவது போல வீழ்த்தப்பட்டனர் 20 அப்பாவி தமிழர்கள். பணம், வசதியான வாழ்க்கை என்று கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தையை நம்பி உயிரை விட்டனர் அந்த கூலித்தொழிலாளிகள். இந்த என்கவுண்டர் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பதை இன்று வரை ஆந்திர அரசு ஏற்க மறுக்கிறது. இந்த திட்டமிட்ட படுகொலைக்கு இதுவரை எந்த நியாயமும் கிடைக்காத நிலையில், 2 ஆண்டுகளும் கடந்து விட்டன.  செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் சிக்கி  தவிக்கும் நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்களை மீட்க இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சன உண்மை. பல நூறு பேரை காவு கொடுத்தும் இன்னும் இப்பிரச்சனை ஓயாததற்கு காரணம் தான் என்ன?

மலைவாழ் கிராமத்தில் இளைஞர்களின் குடும்ப கஷ்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல்கள் அதிக சம்பளம் கொடுப்பதாக கூறி ஏமாற்றுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கூலிக்கு செல்லும் இளைஞர்கள் தாங்கள் செல்லும் வேலை சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டவிரோதமானதா என்று கூட யோசிக்காமல் செல்கின்றனர்.  

செம்மரகடத்தலுக்கு இளைஞர்கள் தள்ளப்படுவதற்கு காரணம் சரியான வேலைவாய்ப்பு இன்மையே என்றும் மலைகிராமங்களில் வளர்ச்சி திட்டங்களை அதிகரித்து வேலைவாய்ப்பை அரசு உண்டாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

பல வகையான மரங்கள் இருந்தாலும் செம்மரங்களுக்கு மட்டும் உலக அளவில் வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அதிலிருக்கும் மருத்துவ குணம் என்றும் கூறப்படுகிறது. செம்மரங்களை சித்த மருத்துவதற்காக பயன்படுத்தும் ஆசிய நாட்டு மக்கள், செம்மரக்கட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களிலும் மருத்துவ குணம் இருப்பதாக நம்புவதால் தான், செம்மரத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்பாவி தமிழர்களும் ஆந்திர போலீசாரிடம் சிக்கிக்கொண்டே இருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் வாழும் மக்கள் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமலும் வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். போதிய கல்வி அறிவு இல்லாமல் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதால் இதனை பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகள், தமிழக கூலி தொழிலாளிகளை பலியாக்கி வருகின்றனர். 

20 தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னரும் தமிழர்கள் மீதான ஆந்திர போலீசாரின் அடக்குமுறை இதுவரை நின்றபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய கல்வி அறிவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான நிரந்திர தீர்வு கிடைத்தால் மட்டுமே தமிழக கூலி தொழிலாளர்கள் இவ்வகையான பிரச்சனைகளிலிருந்து மீள்வார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். 

Related Posts: