கருப்புப் பணம் தொடர்பாகத் தகவல் அளிக்க நிதி அமைச்சகம் தொடங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு 38ஆயிரம் மின்னஞ்சல்கள் வந்ததாகவும், அவற்றில் ஆறாயிரத்து ஐம்பது மின்னஞ்சல்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருப்புப் பணம் குறித்துத் தகவல் அளிப்பதற்காக மின்னஞ்சல் முகவரி (blackmoneyinfo@incometax.gov.in )ஒன்றை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த முகவரிக்கு வந்த மின்னஞ்சல்கள் எத்தனை? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்துத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், கருப்புப் பணம் தொடர்பாக 38ஆயிரத்து 68 மின்னஞ்சல்கள் வந்ததாகவும் அவற்றில் ஆறாயிரத்து ஐம்பது மின்னஞ்சல்களின் கூறப்பட்ட விவரங்கள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்குப் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது.