புதன், 19 ஏப்ரல், 2017

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! April 19, 2017




டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். 

காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200க்கும்  மேற்பட்ட விவசாயிகள் பேருந்து நிலையத்திலிருந்து செய்யூர் தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  போராட்டத்தின் போது, பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். வறட்சியில் வேலையின்றி தவிக்கும் விவசாயத்தொழிலாளர் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன. 

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சிவகங்கையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் தங்கள் காதில் பூச்சுற்றியும், வாயில் கருப்பு துணி கட்டியப்படி கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சையில் 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் இன்று மதியம் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்தியபேருந்து நிலையம் அருகில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். டெல்லியில் விவசாயிகள் நடத்திடும் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts: