புதன், 26 ஏப்ரல், 2017

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் போர் மூளும் அபாயம்..! April 26, 2017




ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் THAAD ஏவுகணைகளை தென்கொரியாவில் அமெரிக்க நிறுத்தியுள்ளதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான வார்த்தை போர் அதிகரித்துள்ளதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்த நிலையில் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு தென்கொரியா வந்தடைந்துள்ளது. அணு ஆற்றலால் இயக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 154 டோமாஹாக் ஏவுகணைகளும், 60 அதிரடி படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. 

அதே போன்று ஏவுகணைகளை வானத்திலேயே தாக்கி அழிக்கும் THAAD ஏவுகணைகளும் தென்கொரியா கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் எதிரிகளின் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க வல்லது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில்  எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறூம் சூழல் உருவாகி பதற்றத்தை அதிகரித்துள்ளது.