ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

அப்பாடா, தப்பியது குழந்தைகள்: புத்தக லாக்கர் வைக்க சிபிஎஸ்இ முடிவு

சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக லாக்கர்கள் ஏற்படுத்துவதைக் கட்டாயமாக்க, சிபிஎஸ்இ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளின் புத்தகச் சுமைகளைக் குறைப்பது பற்றி ஏராளமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து சுமையை குறைக்கவும் குழந்தைகளின் உடல்வலியை போக்கவும் தேவையான புத்தகங்களைத் தவிர, மற்றவற்றைப் பாதுகாப்பாக வைக்க, லாக்கர் வசதியை ஒவ்வொரு சிபிஎஸ்இ பள்ளியும் ஏற்படுத்த வேண்டும் என சிபிஎஸ்இ ஆணையம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் உட்பட பலர் இதுகுறித்த புகார்களையும், வழிகாட்டுதல்களையும் முன் வைத்துள்ளதை அடுத்து, சிபிஎஸ்இ ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக பள்ளிகள் முதலீடு செய்ய வேண்டி இருந்தாலும், இந்த வசதி நீண்டநாள் நன்மைக்கானது என்று தெரிவித்துள்ள சிபிஎஸ்இ மூத்த அதிகாரி, சிபிஎஸ்இ பள்ளி அங்கீகார விஷயங்களில் லாக்கர் வசதிகள் அமைத்தல் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி வணிகமாக்கப்படுவதைத் தவிர்க்க, சிபிஎஸ்இ ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு செமஸ்டர் முறையைப் பின்பற்றி வரும் சிபிஎஸ்இ-இன் நடைமுறையை கணக்கில் கொண்டு, புத்தகங்களை இரண்டு பகுதிகளாகக் குறைக்க, மத்திய அரசும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.