திங்கள், 2 அக்டோபர், 2017

​அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராகும் இந்தியர்! October 02, 2017

​அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராகும் இந்தியர்!


அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் ஊழல் புகார் காரணமாக பதவி விலகி உள்ளார். 
இதையடுத்து, அந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நபர்கள் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவில் பாதுகாப்பு விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் தவிர மற்ற அரசு அதிகாரிகள், தங்கள் அலுவல்சார்ந்த பயணத்துக்கு வர்த்தக விமானங்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், அமைச்சர் டாம் பிரைஸ், கடந்த மே மாதம் முதல் இதுவரை 26 முறை தனியார் சொகுசு விமானத்தைப் பயன்படுத்தி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினார். இவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதேநேரம் சுகாதாரத் துறை துணை அமைச்சராக உள்ள டான் ஜெ ரைட், தற்காலிக சுகாதார அமைச்சராக செயல்படுவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரைஸ் பதவி விலகியதையடுத்து, இந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு ஊடகங்கள், ஊகங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு மாற்று திட்டத்தைக் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

இதுபோல மற்றொரு இந்திய - அமெரிக்கரும் லூசியானா மாகாண முன்னாள் ஆளுநருமான பாபி ஜிண்டால் உட்பட மேலும் சிலர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.