புதன், 18 அக்டோபர், 2017

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிப்பு! October 18, 2017

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிப்பு!


ஜிஎஸ்டி வரியால் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 88 சதவீதம் பேர் தங்களது கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க முன்னுரிமை அளிப்பதாக 54 சதவீத நபர்களும், ஆடைகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை அளிப்பதில்லை என்று 32 சதவீத நபர்களும், ஆடைகளுக்காக செலவு செய்ய போவதில்லை என 3 சதவீத நபர்களும் தெரிவித்துள்ளனர்

பட்டாசு, மத்தாப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க அதிக முக்கியத்துவம் அளிப்பதாக 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சுமார் 19 சதவீதம் பேர் பட்டாசு வாங்க போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர். 

ஜிஎஸ்டி வரியால் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 88 சதவீதம் பேரும், ஜிஎஸ்டியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என 12 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

1120 விவசாயிகளிடம் நடத்திய கருத்து கணிப்பில் 37 சதவீதம் பேர் மட்டுமே தீபாவளியை சந்தோசமாக கொண்டாட போவதாக தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் தீபாவளியை சந்தோசமாக கொண்டாட போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர். 

பெண்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், தங்களது அழகை மெருகேற்ற செலவு செய்ய போவதாக 89.92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 

இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், புது சினிமா படங்களை பார்க்க முன்னுரிமை அளிப்பதாக 69.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் பார் மற்றும் உணவகங்களுக்கு செல்ல விரும்பவில்லை என 63.35 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.