
கீழடியில் அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு 55 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் 110 ஏக்கர் தென்னந்தோப்பில் தொல்லியல் சின்னங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அங்கு அகழாய்வு பணியை தொடங்கியது.
3 கட்ட அகழாய்வு பணியின் முடிவில் மண்பாண்டங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து நிதி ஒதுக்கப்படாததால் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்றன.
இதனையடுத்து 4ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க வலியுறுத்தி பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதனயடுத்து அங்கு 2018ம் ஆண்டு அகழாய்வு பணிகளை நடத்த தமிழக அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் தமிழர்களின் பண்டையகால கலாச்சாரத்தின் கூறுகளை முழுவதுமாக வெளிக்கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்க காலம் தாழ்த்தி வரும் நிலையில் மாநில அரசு முதற்கட்டமாக நிதியை தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.