
பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் இந்த வெற்றி காங்கிரஸை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆல்வார், அஜ்மீர், மண்டல்கார்க் மூன்றும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் தொகுதிகள். ஆல்வார் நாட்டின் தேசியத்தலைநகர் பகுதியைச் சேர்ந்தது. அஜ்மீர் மத்திய ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தது. மண்டல்கர்க் மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ளது. ஆனால் , இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜகவை மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இது வெறும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ள நிலைமை கிடையாது. ஒட்டுமொத்த மாநிலமே பாஜகவுக்கு எதிராக உள்ளது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகள் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. எந்த இடைத்தேர்தலிலும் தேசியத் தலைவர்களோ, அல்லது பிரதமர் உள்ளிட்டவர்களோ பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அமித் ஷா, மோடியின் பெயர்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், மோடி ‘ஸ்மார்ட்’. ராஜஸ்தானில் தோல்வி உறுதி எனத் தெரிந்ததால் தான் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. இந்த வெற்றி வெறுமனே ஒருவாரம், 10 நாள் பிரச்சாரம் செய்து எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் தேர்தலில் தோற்ற பிறகு, அதைக்குறித்து ஆய்வுசெய்து அதற்காக உழைத்தோம். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தலுக்காக தயாரானோம். அதனால்தான், இந்த வெற்றி கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.