
இந்தியாவில் நிகழும் குற்றங்கள் குறித்தும், அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் ஆராயும் அமைப்பு தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இதன் சார்பாக, வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை நாட்டில் தலீத் மக்கள் அதிகக்குற்றங்களுக்கு உள்ளாவதை உறுதிசெய்துள்ளது. இதுதவிர, பல்வேறு அமைப்புகள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கீழ்நிலைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் நிலை குறித்து ‘The Economist' செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களைவிட தலீத் பிரிவினர் சிறையில் 30% அதிகநாட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், தலீத் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், தலீத் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் 2014ம் ஆண்டுக்குப் பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், தலீத் பிரிவைச் சேர்ந்த மாணவர்களில் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் மற்றப்பிரிவினரைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.
உடல் நலத்தை அளவிடும் ஆய்விலும் தலீத் மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். 6-59 மாதமுள்ள குழந்தைகள், 15 - 49 வயதுடையவர்களுக்கு செய்யப்பட்ட ஆய்வில் தலீத் மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கும் தலீத் பிரிவினரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம் உள்ளிட்ட மிக உயர்ந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 642 ஆசிரியர்களில் 4 பேர் மட்டுமே தலீத்கள். இந்தியாவில் உள்ள 496 பல்கலைக்கழகத் துணைவேந்தர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.