
சென்னையின் தட்பவெப்ப நிலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வரப்போகும் கால கட்டங்களில், சென்னையின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கப்போகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேர் எர்த் டிரஸ்ட் (Care Earth Trust) எனப்படும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆராய்ச்சியின் படி, 426 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சென்னை நகரில் வெறும் 64.06 சதுர கி.மீ பரப்பளவில் மட்டுமே மரங்கள் உள்ளது. குறைந்தபட்சம் 33% பரப்பளவிற்காவது பசுமை இருத்தல் வேண்டும் என்ற நிலையில் சென்னையின் பரப்பளவில் வெறும் 15% மட்டுமே பசுமை போர்வை உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தாக்கிய வர்தா புயலில் மொத்தமுள்ள 4.5 லட்சம் மரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது என அரசு மற்றும் தனியாரின் கூட்டு நிறுவனமான தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்விற்கு, துள்ளியமான செயற்கைக்கோள் போன்ற கருவியை பயன்படுத்தி, 200 கி.மீ சாலைகள், 525 பூங்காக்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 6 மாதம் நடைபெற்ற இந்த ஆய்வின் முடிவில், சென்னை மாநகராட்சிக்கு 600 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.
தட்பவெப்ப சூழ்நிலையை தீர்பானிப்பதில், மரங்கள் முக்கிய பங்காற்றுகிறது எனவும் அதிக வெப்பமாக காணப்படும் சென்னை போன்ற நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கவேண்டும் எனவும் வனத்துறைத் தலைவர் பாலாஜி தெரிவித்தார். மேலும், 2000 ஆம் ஆண்டில் 79 சதுர கிலோமீட்டரில் மரங்கள் இருந்தது. 2005 ஆம் ஆண்டில் 69 சதுர கிலோமீட்டராக குறைந்து, தற்போது, 65 சதுர கிலோமீட்டரில் மட்டுமே மரங்கள் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்த வீழ்ச்சிக்கு வர்தா புயல் காரணமா?
இல்லை. நகராட்சிக்கு தேவையான வளர்ச்சி வேலைகள் இதற்கான காரணியாக இருக்கிறது. மேலும், மெட்ரோ ரயில்களாலும், நெடுஞ்சாலை விரிவாக்கத்தினாலும் மரங்கள் அதிகமாக வெட்டப்படுகின்றன என பாலாஜி தெரிவித்தார்.
பகுதி வாரியாக மரங்களின் அளவு:
சமர்ப்பிக்கபட்ட அறிக்கையின் படி, அடையாரில் 33% மரங்கள் இருக்கின்றது. அதனைத்தொடர்ந்து, அண்ணா நகர் (22%)மற்றும் தேனாம்பேட்டை (20.85%) ஆகிய பகுதிகள், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. மனலி, ஆலந்தூர் மற்றும் பெருங்குடி முதலிய பகுதிகளில் மிகக்குறைவான மரங்கள் உள்ளன.
அடையாருக்கு அடுத்து பெருங்குடி மற்றும் ஆலந்தூரில் அதிக அளவு பூங்காக்கள் இருக்கின்றது. இதன்மூலம், மரக்கன்றுகள் நடுவதற்கான இடம் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
வெப்பத்தை உறிஞ்சுவதில் மரங்களுக்கு அதிக பங்கு உள்ளது. குறைந்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது, சிமெண்ட் கட்டிடங்கள் அதிகமாவதாலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது எனவும், இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னையின் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் அபாயகரமான நிலைமை வரும் என சென்னை ரெய்ன்ஸ் போர்டல் (Chennai Rains Portal) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, அதிக வெப்பம் காரணமாக பொதுமக்களை வீட்டிற்குள்ளே இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், சொற்ப அளவே மரங்கள் இருக்கின்ற காரணத்தால், இந்த வருடத்தின் வெப்ப அளவு, கடந்த வருடத்தை விட அதிகமாக இருக்கும் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.
இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம்?
வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்கு, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுமட்டுமல்லாது, திறந்தவெளி இடங்களில் தாவரப்பயிர் செய்து பாதுகாக்கும் முறை பற்றிய கையேடுகளை தயார் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாது, அடுத்த 5 ஆண்டுகளில் மரங்களின் எண்ணிக்கையை 40% உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது, ஒரு வருடத்திற்கு 2 லட்சம் மரக்கன்றுகள் வீதம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என வனத்துறை அதிகாரி பாலாஜி தெரிவித்தார்.
ஏற்கனவே, மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை தேர்வு செய்துவிட்டதாகவும், எந்த வகையான மரங்கள் நட வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பாலாஜி தெரிவித்தார். மூங்கில் போன்ற மரங்கள், வெப்பத்தை 5 டிகிரி அளவிற்கு குறைக்கும் அதேசமயத்தில், சென்னையில் அதிக அளவு புயலின் தாக்கம் இருப்பதால், புயலால் பாதிக்கப்படாத மரங்கள் அதிக அளவில் நடவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சாலை பகுதிகளில் அதிக உயரம் வளராத மரங்களை நடவேண்டும். இதனால், மின்சாரக் கம்பிகள் சேதம் ஆகாமல் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற நடவடிக்கைகளை வெகு விரைவில் எடுக்காவிட்டால், அடுத்தடுத்து வரும் கோடை காலம் மிகுந்த வெப்பத்துடன் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மரம் நடும் வேலையை அரசுமட்டுமல்லாது தன்னார்வ அமைப்புகளும், ஒவ்வொரு தனிமனிதர்களும் தீவிரமாக எடுத்து செயல்பட வேண்டும் என்றும் பாலாஜி தெரிவித்தார். இந்த வேலைகளை தீவிரமாக மேற்கொள்ளாவிட்டால் இனி வரும் அனைத்து கோடை காலங்களிலும் வெப்பத்தின் அளவு அதிகரித்தே காணப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.