செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

ஒரேநேரத்தில் தேர்தல் நடத்த என்ன செய்யவேண்டும் - தேர்தல் ஆணையம் விளக்கம்! February 5, 2018

Image


நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐந்து முக்கிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும்  இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார்.  இதன் மூலம் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் ஏற்படும் நிர்வாக குழப்பங்களை களைவது மற்றும் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். எனினும் இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இது போன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றால் ஐந்து முக்கிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

அதில் முதலாவதாக நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் குறித்த விதி எண் 83ல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விதி எண் 85ல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் சட்டபேரவைக்கான கால அளவு குறித்த விதி எண் 172ல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும், சட்டப்பேரவையின் ஆயுட் காலம் குறித்த விதி எண் 174ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. 

அதுமட்டுமின்றி மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் 356வது பிரிவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட ஐந்து முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts: