வன்னியர்களின் 20% உள்இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த வாரம் 10.5% இடஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து தென் நாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கேட்டு கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்து வந்தது. சில வருடங்கள் இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில், திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் கடந்த மாதம் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுக அமைச்சர்கள் கூட்டணி தொடா்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்களது கோரிக்கையான உள்இடஒதுக்கீட்டை உறுதி செய்த பின்னரே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறினார். இதனால் அதிமுக அமைச்சர்கள் சென்னை திரும்பிய நிலையில், கடந்த மாதம் 3-ந் தேதி சென்னையில் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த மசோதா நடைமுறைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்து பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இடஒதுக்கீடு வழங்கியதால் தொகுதிகளை குறைத்துக்கொண்டோம் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து தென்நாடு மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென் நாடு மக்கள் கட்சி நிறுவனர் கனேசன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில்,இதனை முடிக்காமல், எப்படி இந்த சட்டம் இற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில், 68 சாதியினரை கொண்டுள்ள சீர் மரபினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், 7 சாதியினரை கொண்ட வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மீதமுள்ள 22 சாதியினருக்கு 2.5% சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உண்மையிலேயே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நினைத்திருந்தால், முன்பே செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் வெளையில் தேர்தல் லாபத்திற்காக தற்போது இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையிம் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-vanniyar-reservation-case-chennai-high-court-250447/





