தமிழகத்தில் கொரோனா தொற்றுபாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதிய உச்சமாக 19588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால், இந்தியாவின் பல பகுதிகளில் அசாதாரன சூழல் நிலவி வருகிறது.
அந்த வகையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19588 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சதைதை கடந்து 11,86,344 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 17,164 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 10,54,746 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 147பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 14,193 பேராக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில், 5829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1445 பேரும், கோவையில் 1257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.