தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில், தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கான தொற்று பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 20000-ஐ கடந்துள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேரங்களிலும், வார இறுதி நாள்களிலும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் வரும் மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வர உள்ளது.
கடந்த சில வாரங்களாக இரவு நேர மற்றும் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமலில் இருந்தும், தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என மருத்துவ செயற்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டரக்ள் சங்கம் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. அச்சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி இரவீந்திரநாத்தை தொடர்பு கொண்டோம்.
‘சுமார் ஒரு மாத காலமாக இரவு நேர மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. வழக்கத்தை விட, தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக உள்ளது. தொடர் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
முதல் அலையில் அறிகுறிகளுடன் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை விட, இரண்டாம் அலையில் அறிகுறிகளுடன் தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏறத்தாழ 40 சதவீதம் பேர் அறிகுறிகளுடன் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது. முதல் அலையில், அறிகுறிகளுடன் தொற்றுக்கு உள்ளானவர்களின் சதவீதத்தை அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. ஆனால், தற்போது அறிகுறிகளுடன் இருக்கும் தொற்றாளர்களின் சதவீதத்தை வெளியிடவில்லை.
தற்போது, தொற்றுக்கு உள்ளாகும் பல நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர். இளம் வயது மற்றும் இணை நோய்கள் இல்லாதவர்களும் அதிகம் பாதிக்கிறது. அவர்களின் மருத்துவமனையில் தங்கும் காலம் அதிகமாகி இருக்கிறது. தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பாடுவோரின் எண்ணிக்கையை விட, குணமாகி வீடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் உள்பட மருத்துவப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவரக்ளை விட, கொரோனாவால் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கான ஆக்சிஜன் தேவை அதிகம்.
கொரோனா முதல் அலை கட்டுகுள் வந்த பிறகான 4 மாதங்களில் அடுத்த அலைக்கு தேவையான ஆயத்தப்பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள தவறிவிட்டன. ரெமிடிசிவிர், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவில்லை. இது குறித்தான ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா இரண்டாம் அலையை எதிர்ப்பார்க்கவில்லை என மெத்தனமாக பதிலளித்து சென்றுள்ளார்.
இந்தியாவுக்கு முன்னதாக அமெரிக்காவில் உண்டான கொரோனா இரண்டாம் அலையில், லட்சங்களில் தினசரி பாதிப்பு உண்டானதையும், மருத்துவ கட்டமைப்பு பற்றாக்குறையில் அமெரிக்காவே திண்டாடிய நிலையில், இந்தியா அரசு அதை கண்டு கொள்ளாமலா இருந்தது. மக்கள் தொகை அடர்த்தி குறைவான அமெரிக்காவின் நிலவரத்தை அடிப்படையாக கொண்டு போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, 2-ம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
கொரோனா தடுப்பூசி கொள்முதல் உரிமையை ஆரம்பத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளின் அளவையும் மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் ஆர்டர் செய்யாவில்லை. தற்போது, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசி எளிதில் கிடைக்க வாய்ப்பிருந்த போது, மாநில அரசுகளின் உரிமையை பறித்து விட்டு, தற்போது வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு தேசிய நோக்கமாக கருதவில்லை என்பதாலேயே, தடுப்பூசிகளின் பற்றாக்குறை நிலவி வருகிறது.
நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 23 மாவட்டங்களில் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டவரக்ளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தொற்று அதிகமாக இருக்கிறது என்றால், அந்த மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை விதிக்கலாம். ஆனால், சூழல் அவ்வாறாக இல்லை. தொற்றை கட்டுப்படுத்த இறுதி ஆயுதமாக முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நிச்சயம் அமல்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பாக அரசை தொடர்ந்து வலியிறுத்தி வருகிறோம். ஊரடங்கு தேவையில்லை என வாதிடும் அளவிற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டோம். தற்போது தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு என்பது தான்.
ஊரடங்கு என்பது தற்காலிக முடிவு தான். ஊரடங்கின் போது, கொரோனா பரவலின் சங்கிலித் தொடரை அறுக்க வேண்டும் மற்றும் தொற்றை சமாளிக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’, என்றார்.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/medical-activist-doctor-shanthi-lockdown-tamilnadu-corona-second-wave-300293/