இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்கு ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 3780 உள்ளது. மேலும் தொற்றால் பாதிப்பட்டுள்ள நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்று கிழமை, மீரட் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட 5 நோயாளிகள் மற்றும் லக்னோவில் உள்ள சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இது குறித்து வரும் செய்திகளை சரிபார்க்க லக்னோ மற்றும் மீரட் மாவட்ட நீதிபதிகளுக்கு (டி.எம்) அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய் கிழமையன்று உத்தரவிட்டது.
மேலும் பொது நல மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் அஜித் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறியபோதும், இதய மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் மூளை அறுவை சிகிச்சைகள் இப்போது ஒரு யதார்த்தமாக இருக்கும்போதும், ”மக்களை எப்படி இந்த வழியில் இறக்க அனுமதிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது ஒரு குற்றச் செயலாகும். மேலும் இது ஒரு இனப் படுகொலைக்குச் சமமாகும்” என்று கூறியுள்ள நீதிபதிகள் “மத்திய அரசால் எடுக்கப்பட வேண்டிய உடனடி தீர்வு நடவடிக்கைகளுக்கு வழிநடத்த வேண்டியது அவசியம் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் செய்தி அறிக்கைகளை ஆராய்ந்து, அந்த அறிக்கைகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court-300116/