வியாழன், 3 ஜூன், 2021

தமிழகத்தில் 23% பேருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் – செரோ சர்வே முடிவுகள்

 03/06/2021 கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கு முன்பு தமிழகத்தில் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் சென்னை நீங்கலாக மாநிலத்தில் 23% பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத்துறை இயக்குநகரத்தின் கீழ் இந்த சர்வே மார்ச் – ஏப்ரல் கால கட்டத்தில் நடத்தப்பட்டது. 2020 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மாநிலத்தின் செரோ-பாதிப்பு 31.6% ஆக இருந்தபோது நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, சராசரி ஆன்டிபாடி குறைவாக இருந்தது.

இரண்டாவது கணக்கெடுப்புக்காக சென்னை தவிர 45 சுகாதார பிரிவு மாவட்டங்களில் (Health unit districts) மொத்தம் 22,817 இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பெறப்பட்ட 22,721 மாதிரிகளில், 5,242 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது 23.1% பாதிப்பை குறித்தது. பூந்தமல்லியில் (50.6%) அதிகமாக பாதிப்பு பதிவு செய்யப்பட்டது . குறைந்த அளவாக நாகையில் 8.9% பதிவு செய்யப்பட்டது.

வடக்கு மாவட்டங்களில், முதல் கொரோனா தொற்றின் போது அதிக பாதிப்புகளை கொண்டிருந்த திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் HUDக்களில் முறையே 48.3%, 42.5% மற்றும் 37.7% தொற்று பதிவு செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில், முதல் செரோ-கணக்கெடுப்பில் நகரத்தின் செரோ-பாசிட்டிவிட்டி 18.4% ஆகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட இரண்டாவது கணக்கெடுப்பில் 30% ஆகவும் இருந்தது.

இப்போது கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இராண்டாவது செரோ கணக்கெடுப்பில் முறையே 20.5%, 23% மற்றும் 17.2% ஆன்டிபாடி பாதிப்பைக் காட்டியுள்ளன. இந்த ஹாட்ஸ்பாட்களில் இயற்கை ஆன்டிபாடி அல்லது தடுப்பூசி தூண்டப்பட்ட ஆன்டிபாடி எதுவும் பரவலாக இல்லை என்பதை இது காட்டுகிறது என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் கூறியுள்ளது.

ஆன்டிபாடிகளை மேம்படுத்துவதற்கும் பாதிப்பைக் குறைப்பதற்கும் தடுப்பூசியை அதிகமாக்குவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரபணு வரிசை முறை

தமிழகத்தில் இருந்து 518 மாதிரிகள் மரபணு வரிசைப்ப்படுத்துதலுக்காக பெங்களூருவில் உள்ள இன்ஸ்டெம்மிற்கு அனுப்பப்பட்டது. அதில் 192 மாதிரிகளின் முடிவுகளில், SARS-CoV-2 வைரஸின் பிறழ்வுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக B.1.617.2 என்று கூறப்படும், சமீபத்தில் டெல்டா என்று உலக சுகாதார மையத்தால் வழங்கப்படும் இந்த பிறழ்வு வைரஸ் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், இந்த முடிவுகளை பல்வேறு காரணிகளுடன், எச்சரிக்கையாக விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid19-second-wave-sero-prevalence-in-t-n-stands-at-23-per-cent-310048/