வியாழன், 19 ஆகஸ்ட், 2021

49 இடங்களில் இலவச வைஃபை வசதி; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

பொதுமக்கள் இப்போது ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்ட இடங்களில் சுமார் 30 நிமிடங்களுக்கு இலவச வைஃபை பயன்படுத்தலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னை மாநகராட்சி, சென்னை முழுவதும் 49 ஸ்மார்ட் கம்பங்களை அமைத்தது. இந்த கம்பங்கள், மாநகராட்சி கழிவு மேலாண்மை, மழை அளவு, மாசு கண்காணிப்பு ஆகியவற்றை சிசிடிவி மூலம் கண்காணித்தல் மற்றும் பேரிடர் மற்றும் பிற அவசர நிலைகளில் எச்சரிக்கை அனுப்பும் வசதி, ஸ்மார்ட் விளக்குகள் மற்றும் அவசரகால பட்டன்கள் உள்ளிட்ட பல செயல்பாடுகளைக் கொண்டது.


சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள நகரத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் ஸ்மார்ட் கம்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதல் முயற்சியாக வைஃபை வசதி வழங்கப்படுகிறது. இந்த வைஃபை சேவையை அணுக பொதுமக்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP யை பதிவு செய்ய வேண்டும்.

நகரம் முழுவதும் மெரினா கடற்கரையில் ஏழு, நடைபாதை பிளாசாவில் நான்கு, வெங்கட்நாராயணா சாலையில் நான்கு, திருவான்மியூர் கடற்கரையில் மூன்று மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்ட இடங்களின் முழு பட்டியல் இங்கே: https://chennaicorpora.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf


source https://tamil.indianexpress.com/tamilnadu/now-get-free-wi-fi-from-smart-poles-across-chennai-333533/