தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று கொடநாடு விவகாரம், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், கேஸ் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தமிழக சட்டமன்றத்தில் இன்று, பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது.
கொடநாடு விவகாரம்
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்ததும் பேசிய அவர், கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ’பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர், அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பாமக, பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியின்படியும், நீதிமன்ற அனுமதியின்படியுமே விசாரணை நடைபெற்று வருகிறது. இது அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. விசாரணை அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். என்று கூறினார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படுமா? என பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால், தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. வரிவிதிப்பு அதிகாரமும் இல்லை வருமானமும் இல்லை என்று கூறினார்.
நீட் தேர்வு விலக்கு
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் . நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கோவை, மதுரையில் மெட்ரோ
கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா? என பா.ஜ.க. எம்.எல் ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதியை பெற்று தான் பணிகள் நிறைவேற்ற முடியும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கோவை மட்டுமின்றி மதுரைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார்.
கன்னிப்பேச்சு – அறிமுகப் பேச்சு
சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை. அதனை, ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அடுத்து, தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடை மூலமாக விற்கலாம் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசு
அடுத்ததாக, சமீபகாலமாக, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது. அது போல் மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தொகுப்பு இடஒதுக்கீடு
அனைத்து சாதியினரும் பயன் பெறும் வகையில் தொகுப்பு இடஒதுக்கீடு முறை கொண்டுவர வேண்டும் எனவும், மதுவை ஒழித்து விட்டு வருவாயை பெருக்கும் வழியை அரசு ஏற்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக தலைவர் ஜிகே மணி கோரிக்கை வைத்துள்ளார்.
அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு அனிதா பெயர்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவி அனிதா பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-kodanad-issue-neet-exemption-333708/