12 08 2021
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதன்கிழமை நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு சந்திப்பு நிகழ்த்த உள்ளதாக கூறப்படுகிறது. சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தலைவர்கள் வருகையை பொறுத்து மத்திய உணவு இல்லது இரவு விருந்து இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது இல்லத்தில் அளித்த விருந்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், வலிமையான தலைமை தேவை என்று சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் கபில் சிபல் முக்கியமானவர். அந்த 23 தலைவர்களில் பெரும்பாலானோர் அந்த விருந்தில் பங்கேற்றார்கள்.குரூப் 23 என்பதே ஜி-23 என்று அழைக்கப்படுகிறது. இந்த விருந்து மூலம் ஜி23 இன்றும் செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் இருந்து விலகி, பொது ஈடுபாடுகளை தவிர்த்த சோனியா காந்தி, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். புதன்கிழமை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியுடன் வழக்கமான தேநீர் விருந்தில் அவர் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் ஒற்றுமை உருவானதால் எதிர்க்கட்சிகள் அதை அப்படியே வைத்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வியாழக்கிழமை ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை அவரது அறையில் சந்தித்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்னால் அடையாள போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுவதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜ்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாவிட்டால், ராஜ்யசபா மற்றும் லோக்சபா தொலைக்காட்சி சேனல்களில் தங்கள் எதிர்ப்புகள் காட்டப்படாவிட்டால், சமூக மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் மூலம் தங்கள் குரலை மக்களிடம் கொண்டு செல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/india/sonia-gandhi-plans-opposition-get-together-331715/