வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பெயர்… சட்டமன்றத்தில் புகார்; அதிமுக வெளிநடப்பு

 

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில், கொடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று கொடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியும், கொடநாடு விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியும் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களைத் தொடர்ந்து பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கலைவாணர் அரங்கிற்கு வெளியே அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், அரசின் செயலை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எதிர்கட்சி தலைவர் பேச வாய்ப்பளிக்கவில்லை. இதைக் கண்டித்து சட்டப்பேரவையை இன்றும் நாளையும் அதிமுக புறக்கணிக்கிறது. பொய் வழக்குகளை போட்டு அதிமுகவை செயல்படவிடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். எவ்வித வழக்குகளுக்கும் அதிமுக அஞ்சாது. ஏனென்றால் அது பொய்யான வழக்கு என்று மக்களுக்கு தெரியும். எங்களுடைய ஜனநாயக கடமைகளை நாங்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறோம். என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கொடநாட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அதில் காவலாளி கொல்லப்பட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கொடநாடு வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர். பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது. 

நீதிமன்ற விசாரணையின் போது சயன் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? கடைசி நேரத்தில் என்னையும் கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடக்கிறது. விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது அதனை மீண்டும் விசாரிப்பது திமுக அரசுதான். மக்களை திசை திருப்ப திமுக அரசு  நாடகமாடுகிறது. அதிமுக தலைவர்கள் மீது திமுக வீண் பழி சுமத்துகிறது.  தடைகளை தாண்டி அதிமுக வெற்றிநடை போடும் என்று கூறினார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியின்படியும், நீதிமன்ற அனுமதியின்படியுமே விசாரணை நடைபெற்று வருகிறது. இது அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. விசாரணை அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-protest-infront-of-tamilnadu-assembly-for-kodanadu-issue-333541/