கேரளாவில் கனமழையால் நிலசரிவு ஏற்பட்ட ஒரு நாளுக்கு பிறகு, குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பேரிடரில் தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுவரை, பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கேரளாவில் சனிக்கிழமை நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார். “மீட்புப் பணியாளர்கள் இதுவரை 15 உடல்களை மீட்டுள்ளனர். இதில் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல்லில் இருந்து 12 உடல்களும், பெருமேட்டில் இருந்து 1 உடலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள காஞ்சாரில் இருந்து நேற்று மீட்கப்பட்ட 2 உடல்களும் அடங்கும்” என்று ராஜன் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல்லில் வசிப்பவர்களின் வீடுகள் உடைமைகள் சேதம் அடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் பல வயதான முதியவர்கள் தங்கள் வாழ்நாளில் முதன்முறையாக இவ்வளவு கடுமையான மழையைப் பார்ப்பதாகவும் அனுபவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இராணுவம், என்.டி.ஆர்.எஃப், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டிக்கல் மற்றும் கொக்காயர் பஞ்சாயத்துகளில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணியாளர்கள் கூட்டிக்கல் பஞ்சாயத்திலிருந்து மேலும் 4 உடல்களை மீட்டனர், இது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான குக்கிராமமான கொக்காயறில் தொடர்ச்சியான மழையில் சனிக்கிழமையன்று நிலச்சரிவுகளையும் மனித உயிரிழப்புகளையும் கண்டது.
ராஜம்மா, என்ற பெண் மலை அடிவாரத்தில் தனது வீட்டிற்கு அருகில் சில கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் கண்களுக்கு முன்னால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார்.
கூட்டிக்கல்லில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (கே.எஸ்.டி.எம்.ஏ) கோரிக்கையின் அடிப்படையில், கடற்படை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர், ஐ.என்.எஸ் கருடாவும் கே.எஸ்.டி.எம்.ஏ தயாரித்த நிவாரண பொருட்களை கைவிட கூட்டிக்கல்லில் தொடங்கப்பட்டது. கூடுதலாக, இந்திய கடற்படை தெற்கு கடற்படை மூலம் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஜே.ஜே.எம்.எம் ஹெச்.எஸ் பள்ளி-யெண்டையார் அருகில் உள்ள ஹெலிபேடிற்கு எடுத்துச் சென்றது.
ஹெலிகாப்டர் மூலம் வானத்தில் இருந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிலையை மதிப்பிடுவதற்கு ஆய்வை மேற்கொண்டது. விமான மூலம் மீட்புக் குழுக்கள் மற்றும் கடற்படை டைவர்ஸ் குழு ஆகியவை சிவில் நிர்வாகத்திற்கு உதவ தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் சிலர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பதிவில் பேரிடர் பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோவிட் -19 சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி முகாம்கள் செயல்படுவதை உறுதி செய்ய அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முகாம்களில் இருப்பவர்கள் முகமூடிகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகாம்களில் தங்கக்கூடிய மக்களை அதிகாரிகள் கணக்கிட வேண்டும். அதிகமான மக்கள் தங்குவதற்கு தேவைப்பட்டால் மாவட்ட அதிகாரிகள் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” என்று பினராயி விஜயன் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/kerala-landslide-locals-displaced-death-toll-rises-356748/