கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தாய்மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று சீமான் கூறியதாக சர்ச்சை எழுந்த நிலையில், சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. அனைவரும் சைவம், மாலியம் (வைணவம்) என்கிற தமிழர் சமயத்துக்கு திரும்ப வேண்டும் என்று சீமான் கூறியிருப்பது உறுதியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் பேச்சுகள் பெரும்பாலும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பனைச்சந்தை திருவிழாவில் கலந்துக் கொண்ட சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் சீமான், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார் என சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உள்ள வீடியோவில் அவர் அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவில் சீமான் பேசியிருப்பதாவது,
நாங்கள் தமிழர்கள். எங்கள் சமயம் வேறு. எங்கள் வழிபாட்டு முறை வேறு. எங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் சமயமே வேறு. இதில் உறுதியாக இருக்கிறேன். அதை மீட்டெடுப்பதை துவக்குகிறேன், அதில் வெல்வது வேறு, மீட்டெடுக்கும் போது என்னுடைய சமயம், மெய்யியல் கோட்பாடு என அனைத்தையும் சேர்த்துதான் மீட்டெடுப்பேன். அதில் நாங்கள் சைவர்கள். சிவன், முருகனை வழிபடுகிறவர்கள். என்னுடைய மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிச் சென்ற போது என்ன கோத்திரம் என கேட்டனர். நான் சிவகோத்திரம் என்றேன். ஏனெனில் நாங்கள் சிவசமயம். எங்கப்பாவின் சொத்து பத்திரத்தில் சிவகோத்திரம் என்றுதான் எழுதி உள்ளது. வாங்க எங்க வீட்டில் காட்டுகிறேன். அதில் சிவகோத்திரம் என்று தான் எழுதியுள்ளது.
இன்றைக்கு சட்டப்படி இந்து என்கிறீர்கள். அன்றைக்கு சிவசமயம் என்றுதான் எழுதி இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுவதால் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். மாயோன் என்கிற கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதை தூய தமிழில் மாலியம் என்கிறோம். இப்படியாகத் தான் சமயங்கள் இருந்திருக்கிறது. வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பௌத்தன், சீக்கியன், சைவன், பார்சி என நாங்க எல்லாரும் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து அல்ல. வெள்ளைக்காரன்போட்ட சட்டப்படி இந்து. அதனை நான் ஏற்கவில்லை, எதிர்க்கிறேன். அவ்வளவு தான் என்கிறார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தமிழன் இந்துவே அல்ல, கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்று ஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம். மீளனும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிற மாதிரி திரும்பி வா, என சீமான் பேசியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், இன்று பனைத் திருவிழா தொடங்கிவைத்து சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துக்களை திசைதிருப்பி வழக்கம்போல் சில வில்லங்க பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர். தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் சீமான் சொன்னது, உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றதற்கு, அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு, மீண்டும் பதிலை தொடர்கிறார். அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம், மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.
ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு இஸ்லாம் மற்றும் கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் அவதூறுப் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர் என விளக்கம் அளித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/video-explanation-on-seeman-speech-controversy-about-muslims-and-christians-356563/