பாஜக பிரமுகரான கல்யாணராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் இவர், முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை கடுமையாக விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் டவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதைக் கண்டித்து திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ், சென்னை சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
உடனடியாக களத்தில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், புகார் பெறப்பட்ட 10 மணி நேரத்திற்குள் கல்யாணராமனை கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் தேவிகுப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-leader-kalyanasundaram-arrested-at-midnight-by-chennai-crime-branch-356464/