வெள்ளி, 1 அக்டோபர், 2021

சென்னை ஏர்போர்ட்டில் அமைச்சர் பி.டி.ஆர் வாக்குவாதம்; மன்னிப்பு கேட்ட அதிகாரி!

 

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை 2 லேப்டாப்களை எடுத்துச் சென்றதற்காக மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணியாளர் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 30) காலை சென்றுள்ளார். அப்போது, அவர் 2 லேப்டாப்களை எடுத்துச் சென்றதால் மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், பயணிகள் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியதால் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், அங்கே கடுமையான வாதம் ஏற்பட்டது.

2 லேப்டாப்களை எடுத்துச் செல்வதில் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளரிடம் கூறினார். அப்போது, அமைச்சர் பி.டி.ஆர் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் தான் நிதியமைச்சர் என்று சொன்னதாகவும், அந்த அதிகாரியிடம் ஹிந்தியில் பேச முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கே மூத்த அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் நிலைமை சீராகியது.

மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மன்னிப்பு கேட்ட பிறகு, சி.ஐ.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் மன்னிப்பு கேட்டார். பின்னர் அமைச்சர் தனது 2 லேப்டாப்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக எம்.பி கனிமொழி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியால் தொல்லைக்கு ஆளானார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாததற்காக நீங்கள் இந்தியனா என்று அதிகாரியால் கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ptr-palanivel-thiagarajan-stopped-by-cisf-si-at-chennai-airport-for-carrying-two-laptops-349053/