திங்கள், 18 அக்டோபர், 2021

அறநிலையத்துறை கல்லூரியில் இந்துக்களுக்கு மட்டும் வேலையா? வெடித்த சர்ச்சை

 18 10 2021 சென்னை கொளத்தூரில் இந்து அறநிலையத் துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத்துறை துறையின் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்” என்று அறிவித்திருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை 2021-22 முதல் கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரி உட்பட 4 புதிய கல்லூரிகளைத் தொடங்குகிறது

செய்தித்தாள்களில் அக்டோபர் 13ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணிக்கும் பி.காம், பிபிஏ, பி.எஸ்ஸி, பி.எஸ்ஸி கணினி அறிவியல், பிசிஏ, தமிழ், ஆங்கிலம், கணிதம் படிப்புகள் கற்பிக்க உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அதே நாளில், பிற்பகலில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், வாட்ச்மேன் மற்றும் துப்புரவு பணியாளர் உட்பட 11 ஆசிரியர் அல்லாத பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்களையும் அறிவித்துள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத் துறையின் முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞரான எம். மகாராஜா, இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 10, அனைத்து ஊழியர்களும் இந்து மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. இது கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு மட்டுமே பொருந்தும். அதனால், இந்த விளம்பரம் தவறானது என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.பாண்டியன், இந்து அறநிலையத் துறை 36 பள்ளிகள், ஐந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியை நடத்தினாலும், இந்துக்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படுவது இதுவே முதல் முறை என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“மாநில அரசால் நடத்தப்படும் ஒரு துறையானது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. பிற மதங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தகுதியற்றவர்களாக ஆக்குகிறது” என்று அவர் கூறினார். மதுரையில் உள்ள எம்எஸ்எஸ் வக்ப் போர்டு கல்லூரியில் பல முஸ்லீம் அல்லாத ஆசிரியர்கள் உள்ளனர். அதே போல, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டி.வீரமணி, இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி மட்டுமே நிறுவனத்தை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத் துறை சார்பில் கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தில் செய்யாறு கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “இந்து அறநிலையத் துறை சட்டம், இந்து அறநிலையத்துறையில் இருந்து வரக்கூடிய சம்பளம் இந்துக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று இருக்கிறது. திமுக அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். சட்டத்தின்படிதான் அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை எல்லோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து பிறகு அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், சிக்கலாகிவிடும். அதனால்தான், அரசு இப்படி அறிவித்துள்ளது.” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு உயர்கல்வி துறைக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்து அறநிலையத் துறையின் கீழ் வருகிற கல்லூரி. அதனுடைய வருமானத்தில் இருந்து நடத்தப்படுகிற கல்லூரி. ஏற்கெனவே, இது போல, பழனி ஆண்டவர் கல்லூரி இருக்கிறது. பழனி ஆண்டவர் கல்லூரி ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கே இதே போல, நடைமுறைதான் இருக்கிறது. இதற்கெல்லாம், இந்த கல்லூரிதான் முன்னோடி கல்லூரி. இந்த கல்லூரி கிட்டத்தட்ட ஒரு தனியார் கல்லூரி அல்லது அரசு நிதி உதவி பெறும் கல்லூரி போன்றது.

திமுக அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். அதனால், அவர்கள் இதை தவறாக அறிவிக்கவில்லை. இந்து அறநிலையத் துறை சட்டத்திற்கு உட்பட்டுதான் அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை மாற்றி அறிவித்திருந்தால், யாராவது நீதிமன்றம் சென்றால் இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்பதுதான் வெற்றிபெறும்.

கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரி, திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் என்று கோயில் பெயர் வைத்து இந்த கோயில்களில் இருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் இந்த கல்லூரிகளை நடத்துகிறார்கள். அப்போது, இந்த கோயில்களில் இருந்து வரக்கூடிய வருமானம் இந்துக்களுக்குதான் போய் சேர வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. நாளைக்கு யாரும் நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் அரசு சட்டப்படி அறிவித்திருக்கிறது” என்று கூறினார்.

இதே போல, கன்னியாகுமரியில் குழித்துறை பகுதியில் உள்ள தேவி குமாரி கல்லூரி இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. அங்கேயும் இதே போல, இந்துக்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/hrce-advertisement-only-hindus-can-apply-in-hindu-college-staff-trigger-controversy-356743/