16 10 2021 பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலின் தட்சிணாமூர்த்த்தியை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனல் தொடந்து அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலை சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் அக்டோபர் 11ம் தேதி பெரியார் குறித்து ஒரு வீடியோ வெளியானது. அதில், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில், “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.
தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி மீது போலீசார் 153A,504B,505 (1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
தமிழகத்தில் பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என பல சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்த பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் தட்சிணா மூர்த்தியை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-arrested-for-derogatory-video-released-on-periyar-356213/