சனி, 16 அக்டோபர், 2021

திமுக எம்பி கைது: இணையத்தில் இடையே மூண்ட சண்டை

 பண்ருட்டியில் முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜு கொலை வழக்கில், கடலூர் திமுக எம்.பி ரமேஷ் கைது செய்யப்பட்டது குறித்து பாஜக – பாமக கட்சியினர் இடையே சமூக ஊடகங்களில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

கடலூர் திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான டி.ஆர்.வி காயத்திரி முந்திரி தொழிற்சாலையில் செப்டம்பர் 20ம் தேதி கோவிந்தராசு என்ற தொழிலாளி இறந்தார். அவருடைய மகன் தனது தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அதனால் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, திமுக. எம்.பி ரமேஷின் தனி உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் எம். கந்தவேல், எம். அல்லா பிச்சை, கே. வினோத், சுந்தரராஜன் என 5 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணத்தில் திமுக எம்.பி ரமேஷை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த வழக்கில், திமுக எம்.பி ரமேஷ் அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். எம்.பி ரமேஷை ஒரு நாள் காவலில் எடுத்த விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை அக்டோபர் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜு கொலை வழக்கில், கடலூர் திமுக எம்.பி ரமேஷ் கைது செய்யப்பட்டது குறித்து பாஜக – பாமக கட்சியினர் இடையே சமூக ஊடகங்களில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் ஆலையில் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் விவகாரத்தை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கவர்னரிடம் கொண்டு சென்றதாக பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கொலையான கோவிந்தராஜு குடும்பத்தினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்.

பாமக அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தாங்கள் கொடுத்த அழுத்தத்தால் தான் திமுக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறி ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்று பாமகவினர் விமர்சித்து வருகின்றனர்.

பாமகவினர் நாங்கள் தான் காரணம் என்று கூறியதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருக்கிறேன். என்னை பேச வைத்து விடாதீர்கள். அது உங்கள் யாருக்கும் நல்லது அல்ல…” என்று குறிபிட்டுள்ளார்.

ஆனால், பாமக ஆதரவாளர் ஒருவர் குறிப்பிடுகையில், “பாமக போராடி பெற்றதை கூச்சமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுவது தான் கூட்டணி தர்மமா அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா பாஜக என்னத்த கிழிச்சிகிட்டு இருக்குன்னு தெரியும்” என்று கடுமையாக பதிலளித்துள்ளார்.

பண்ருட்டியில் முந்திரி தொழிற்சாலை தொழிலாளில் கோவிந்தராஜு கொலை வழக்கில் திமுக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு காரணம் தங்கள் கட்சி தான் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக – பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cashew-nut-factory-labour-murder-case-dmk-mp-remanded-bjp-and-pmk-cadres-fight-in-social-media-356086/