திங்கள், 4 அக்டோபர், 2021

மத்திய அமைச்சர் மகன் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் கார்மோதி 4 விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதலமைச்சர் பிரசாத் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்.  விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 5 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா உள்ளிட்ட 16 பேர் மீது திகுனியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.