“மனிதன் காட்டை அஞ்சுகிறான், அவன் விரும்பாத ஏதோ ஒன்றை அவனுக்கு அது நினைவூட்டியபடி இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் அவன் அதை சதா அழித்துக்கொண்டே இருக்கிறான்.” என்கிற வரிகளை எங்கோ படித்தது தற்போது சட்டென நினைவுக்கு வந்து போகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் அருகே மசினகுடியில் சமீப நாட்களாக MDT23 என பெயரிடப்பட்ட புலி ஒன்று கால்நடைகளையும், சில மனிதர்களையும் கொன்றுள்ளதாகக் கூறி தற்போது அதனைக் கொல்வதற்கு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் அனுமதியளித்துள்ளார். அங்குள்ள பொதுமக்கள் புலி ஏற்படுத்திய அச்சம் காரணமாக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அவர்களின் அன்றாட நாட்கள் மிகுந்த அச்சத்துடனே கடத்த வேண்டியிருக்கிறது.
ஆனால், இவையெல்லாம் ஒரு புலியைக் கொல்வதற்கான போதுமான ஒப்புதல் சீட்டுக் காரணங்களா என்கிற கேள்வி மேலெழுகிறது.
நானூற்றுச் சொச்சம் மில்லியன் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பூமியை தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் வெறும் 6 லட்சம் மணிநேரம் வாழ்நாட்கள் கொண்ட மனித இனம், மற்றொரு இனத்தை அழிப்பதற்கான தார்மீக உரிமையை எங்கிருந்து பெறுகிறது என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் முன்வந்து நிற்கின்றன.
இது குறித்து வன விலங்கு ஆர்வலரும் எழுத்தாளருமான தியடோர் பாஸ்கரனிடம் பேசியபோது, “ஒரு புலியை கொல்வதற்கான முடிவுகளை உடனடியாக எடுத்துவிட முடியாது. முதலில் அது ஆட்கொல்லிதான் என்பதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலும் வயதானவை, வேட்டையாட முடியாத அளவு காயமடைந்த புலிகள்தான் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன. முதலில் மனித மாமிசத்தைப் புசித்த பின்னர் அதன் சுவை மற்றும் எளிதில் வேட்டையாடும் வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் அது மீண்டும், மீண்டும் மனிதர்களைக் கொன்று ஆட்கொல்லியாக மாறுகிறது.
உணர்வுப்பூர்வமாகப் பார்த்தால் புலியைக் கொல்வது தவறானதாக தோன்றலாம். ஆனால் இந்த விடயத்தை அறவியல்பூர்வமாகதான் அணுக வேண்டும். நமது அரசின் நோக்கம் ஓர் இனத்தைப் பாதுகாப்பதுதான். தவிர்த்து காட்டில் அலையும் புலியைக் கூண்டில் அடைப்பது மரணத்தைவிடக் கொடியது. அதற்கான செலவினங்களும் மிக அதிகம். இந்த ஒரு ஆட்கொல்லி மற்ற புலிகளுக்கும் இடையூறாக இருக்கும். எனவே வேறுவழியின்றிதான் சுட்டுக்கொல்ல ஆணையிடப்படுகிறது.” என கூறுகிறார்.
மசினகுடி மக்களின் நிலையும், முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் பிறப்பித்த உத்தரவும் சரியானதே என்று தோன்றுகிறது.
இதேபோல ‘உயிர்’ இதழ் ஆசியர் ஏ.சண்முகானந்தத்திடம் பேசிய போது, “தனக்கான வாழ்வெல்லை சுருங்கும் போதும், தீவுகளாகக் காட்சியளிக்கும் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போதும், இட நெருக்கடியானால் வயது முதிர்ந்த புலிகளும் காயம்பட்ட புலிகளும் என்ன செய்யும்? சிறுத்தை உள்ளிட்ட மற்ற காட்டுயிர்களுக்கும் இந்தப் பார்வையை விரிவுபடுத்திப் பார்த்தால், காட்டுயிர்களின் வாழ்வு மிகவும் சிக்கலுக்குரியதாக மாறிவிட்ட நிலை புரியும். இப்படிக் காயம்பட்ட புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டது என அதனைக் கொல்வதும், கொன்றபின் அதனைக் கொண்டாடுவதும், இவ்வுலகில் வாழத் தகுதி படைத்தவன், தான் மட்டுமே (மனிதன் மட்டுமே) என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
ஓருயிர் அமீபாவிலிருந்து பேருயிரான யானை முதலான அனைத்து காட்டுயிர்களும் வாழத் தகுதி படைத்ததாக இப்புவியின் சூழலமைவு இருப்பதுடன், மனிதன் இந்தப் பிணைப்பின் ஓர் ‘அங்கம் தான்’ என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. சங்கிலிப் பிணைப்பில் எந்தவொரு கண்ணி அறுந்தாலும், அதன் பாதிப்பு மற்றொரு இடத்தில் கடுமையாக எதிரொலிக்கவே செய்யும்.” என எச்சரிக்கிறார் சண்முகானந்தம்.
ஒருபுறம் கொல்வது சரி என்றும், மறுபுறம் தவறு என்றும் என இரு வேறு கருத்துகள் பரஸ்பரம் மோதிக்கொண்டே இருக்கின்றன.
யதார்த்தத்தில், எவ்வகையிலேனும் இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட சமூக அமைப்பு முறைதான் புலி போன்ற வன விலங்குகளின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பதாக தோன்றுகிறது. இதனை மாற்றாமல் சுட்டுக்கொல்லது, கொல்வது பாவம் என பேசிக்கொண்டிருப்பது என்பது ஏன் என் நாம்தான் சிந்திக்க வேண்டும்.
source https://news7tamil.live/kill-the-tiger-what-social-activists-are-saying.html