புதன், 2 பிப்ரவரி, 2022

’21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

 இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள

21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

​ இந்த கடிதத்தில் ” நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 31-1-2022 அன்று 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும், அதேபோன்று, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 3 சம்பவங்களில், 68 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள் என்றும், இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் துயரத்திற்கு ஆளாக்குவதோடு, அக்குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

source https://news7tamil.live/mk-stalin-stalin-letter-to-minister-jaishankar.html