கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , திரினாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சமூகநீதியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்கு பிற்போக்கு சக்திகள் சவால் விடுகின்றன எனவும், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்தால்தான் எதிர்த்து போரிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டால்தான் முடியும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், குறிக்கோள்களை அடைய மாநிலங்களால் ஆன ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரமிது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதி செய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோர்க்க வேண்டியது இன்றியமையாதது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலை நிறுத்துவது பற்றியாகும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
source https://news7tamil.live/social-justice-alliance-chief-minister-calls-on-37-parties-including-aiadmk-and-bjp.html