புதுக்கோட்டை மாவட்டத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி இரண்டு கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சமானப்புரத்தில் உள்ள கிறிஸ்துவ சபையில், ஊழியம் செய்து வரும் 2 கன்னியாஸ்திரி பெண்கள், கடந்த 21-ந் தேதி திம்மயம்பேட்டை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரது வீட்டிற்கு ஜெபம் செய்வதற்காக சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதியின் ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ் பாபு உள்ளிட்ட சில அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘
மேலும் கன்னியாஸ்திரிகளிடம் இருந்து அவர்களின் உடைமைகளை பறித்துக்கொண்டு விரட்டியுள்ளன. இது குறித்து கடந்த 24-ந் தேதி கிறிஸ்துவ சபையின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கணேஷ் பாபு நேற்று கைது செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையில் சார்பில் கூறுகையில்,
கணேஷ் பாபு மற்றும் சிலர் ஜனவரி 21 அன்று திண்மயம்பட்டி கிராமம் அருகே கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிற்கு பிரார்த்தனைக்காகச் சென்ற ராணி மற்றும் தேவசாந்தி ஆகிய இரு கன்னியாஸ்திரிகளை தடுத்து நிறுத்தினர். கன்னியாஸ்திரிகள் இந்து குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அவர்கள், மொபைல் போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட உடமைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் தங்கள் உடைமைகளை மறுநாள் திருப்பித் தருவதாகக் கன்னியாஸ்திரிகளிடம் கூறியதாகவும், ஆனால் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், அவர்கள் ஜனவரி 24 ஆம் தேதி இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கணேஷ் பாபு மீது ஐபிசியின் 147 (கலவரத்திற்கான தண்டனை), 341 (தவறான தடைக்கான தண்டனை), 294 (பி) (ஆபாசம்), 387 (பணம் பறித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கனேஷ் பாபு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல இந்து அமைப்புகள் இலுப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், கன்னியாஸ்திரிகள் மத மாற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கணேஷ் பாபுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இதனால் தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukkottai-man-of-rss-arrested-for-harassing-nuns-404695/