நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 30வது மாநில மாநாட்டையொட்டி நாகை அவுரிதிடலில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொது செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
நாடு விடுதலை பெற்றும் விவசாயிகளுக்கு விடுதலை கிடையாது. இடுப்புக்கீழ் கட்டிய துண்டை தோளில் போட வைத்த சங்கம் தமிழ்நாடு விவசாய சங்கம். விவசாய நிலத்தை பாதுகாத்து, விவசாயிகளை பாதுகாத்து வருவது தான் தமிழ்நாடு விவசாய சங்கம்.
பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை, உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை.
பாரதியார் ஜனதா கட்சியினர் மோடியை இரும்பு மனிதன் என விளம்பரம் செய்துள்ளனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் டெல்லியில் அந்த இரும்பு மனிதரை ஆட்டி பார்த்தனர். நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் தோற்கடித்துள்ளனர். ஓராண்டு போராடி மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வைத்தவர்கள் விவசாயிகள்.
மின்சார திருத்த மசோதா வரவுள்ளது. விவசாயிகளின் சலுகைகளை பறித்து வருகின்றனர். விவசாய காப்பீட்டு திட்டத்தை ஒழித்து விட்டார்கள். அரிசி, கோதுமை, பருத்தி கொள்முதலை அரசு நிறுத்தியதால் பெரு முதலாளிகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறனர்.
ரயில்வே, சாலை, இன்சூரன்ஸ், விமான நிறுவனம் என அனைத்து சொத்துக்களையும் மோடி அரசு விற்பனை செய்து வருகிறது.
இப்படி அனைத்தையும் தனியாரிடம் விற்பனை செய்தால் பாராளுமன்றம் மட்டுமே மிச்சம் இருக்கும். மோடி விற்க மாட்டார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கின்றனர்.
பல கலாசாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும். ஏழைகளுக்கு பணம் இல்லை என்று தெரிவிக்கும் மத்திய அரசு, பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் மத்திய அரசு, அதானி, அம்பானி உள்ளிட்ட பெரிய முதலாளிகள் வாங்கிய 10 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறது.
அம்பானியையும் அதானையும் வாழவைக்கும் அரசு ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சி நீடித்தால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஆபத்து. 2024ல் நடைபெற உள்ள தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகின்றார் என்றார் கே.பாலகிருஷ்ணன்.
source https://news7tamil.live/secular-forces-must-unite-k-balakrishnan-insists.html