சனி, 2 செப்டம்பர், 2023

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று குவியலாக கிடந்த ஆதார் மற்றும் பான் கார்டுகள்!

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதி வாசல் அருகே, குவியல் குவியலாக கிடந்த பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகளால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு‌ ஏற்பட்டது

சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி,ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில், குவியல்,
குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள்
போன்றவைகள் மொத்தமாக கொட்டப்பட்டு கிடந்தன.

இதை அடுத்து சிலர் அந்த ஆதார், பான் கார்டுகளை ஆர்வத்துடன் எடுத்துப்
பார்த்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை
வீரர்கள் தடுத்தனர். இவைகளை விமான நிலைய ஊழியர்கள் தான் வந்து கொட்டி இருக்கின்றனர். அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்று கூறினார்கள்.

இந்திய மக்களின் முக்கியமான அடையாள ஆவணம் ஆதார் கார்டு.அதைப்போல் மக்களின் வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் கொண்டது பான் கார்டு. இவைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள் ஆகும்.

இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார், பான் கார்டுகள் கேட்பாரற்று பொது
இடங்களில் கிடந்தால், அதைக் கண்டெடுப்பவர்கள், அருகே உள்ள அஞ்சல் (போஸ்ட்
பாக்ஸ்) பெட்டிகளில் போட்டு விட வேண்டும். இல்லையேல் அருகே உள்ள அஞ்சல்
நிலையங்களில் (போஸ்ட் ஆபீஸ்) ஒப்படைத்து விட வேண்டும் என்பது அரசின் பொதுவான
விதிமுறையாகும்.

அஞ்சல் துறையினர்,அந்த கார்டுகளில் உள்ள முகவரிகளுக்கு, அஞ்சல் துறை தங்களது செலவில் அனுப்பி வைத்து விடும். இந்த நடைமுறை இதுவரையில்
இந்தியா முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் குவியலாக ஆதார்
மற்றும் பான் கார்டுகள், விமான நிலைய குப்பைத்தொட்டி அருகில்
கொட்டப்பட்டுள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது,

பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை,சிலர் தவறுதலாக விட்டு
செல்கின்றனர்.சில பயணிகள் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன.
இதைப்போல் கேட்பாரற்று விமான நிலையத்திற்குள் கிடக்கும், கார்டுகளை விமான
நிலைய ஊழியர்கள் எடுத்து வந்து, விமான நிலைய மேலாளர் அறையில்
ஒப்படைப்பார்கள். அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.
கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து, பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக
யாரும் வராமல் தேங்கி கிடக்கும், கார்டுகளை இதைப்போல் குப்பைகளோடு சேர்த்து
விடுகிறோம்.

இந்த கார்டுகளை முன்பு அஞ்சல் துறை மூலம், கார்டுகளில் உள்ள முகவரிக்கு
அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன.ஆனால் தற்போது கார்டுகளை தவறவிட்டவர்கள்,
இணையதளம் மூலமாக, புதிய ஆதார் கார்டுகள் டவுன்லோட் செய்து கொள்கின்றனர். எனவே காடுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து, கார்டுகளை கேட்பதும் இல்லை.
அதைப்போல் அஞ்சல் துறையும் முன்பு போல், இந்த கார்டுகளை திருப்பி அனுப்புவதில்
ஆர்வம் காட்டுவது இல்லை. எனவேதான் வேறு வழி இல்லாமல், இதைப்போல் குப்பையில்
போட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் தரப்பிலோ, ஆதார்,பான் கார்டுகளின் எண்கள் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகளை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், தவறுகள், மோசடிகள் நடக்கின்றன. இந்த நிலையில் பயணிகள் விட்டுச் சென்ற ஆதார், பான் கார்டுகளை, இதைப்போல் குப்பைத் தொட்டியில் போடுவது சரியானது அல்ல. அவைகளை முன்பு போல், அஞ்சல் துறை மூலம், அந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையேல் விமான நிலையத்திலேயே தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


source https://news7tamil.live/aadhaar-and-pan-cards-lying-in-heaps-at-chennai-international-airport.html