/indian-express-tamil/media/media_files/2024/12/14/3KrmD6wSz0ggIJKGPofX.jpg)
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதனிடையே இந்த தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் மக்களுக்கு எச்சரிக்கையும், புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
து குறித் டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல்கள் நடக்கும்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். அதே சமயம், இன்றைய காலக்கட்டத்தில் பல இணைதளங்கள் இது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு, அவர்களின் வாக்கு விருப்பங்களை அறியக் கோரி அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இத்தகைய அழைப்புகள் சட்டவிரோதமானவை எனக் கண்டறியப்பட்டால் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 3) காலை முதல் தங்களுக்கு இத்தகைய அழைப்புகள் வருவதாகப் அந்த தொகுதியில் இருந்து பலர் தெரிவித்துள்ளனர். அந்தத் தானியங்கி அழைப்புகளில், அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களை அழுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்துச் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "வேலையில் இருந்தபோது எனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அதில் எண்களை அழுத்துவதன் மூலம் வேட்பாளர்களைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க.விற்கு 1, தி.மு.க.விற்கு 2, தமிழக வெற்றிக் கழகத்திற்கு 3, நாம் தமிழருக்கு 4 மற்றும் இதர கட்சிகளுக்கு 5 என எண்களை அழுத்துமாறு அந்தத் தானியங்கி அழைப்பு கூறியது. இது முறையான அழைப்பாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
நுகர்வோர் ஆர்வலர்களும் இத்தகைய அழைப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இவை டெலிமார்க்கெட்டிங் பாணியிலான அழைப்புகள், இதில் சைபர் பாதுகாப்பு அபாயங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழைப்புகளைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டு சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்துப் பதிலளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், கருத்துக்கணிப்புகளுக்குத் தடை இல்லை என்றாலும், அத்தகைய செயல்பாடுகள் முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதியுடன் நடத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் இது போன்ற மொபைல் வழி ஆய்வுகளுக்கு அனுமதி பெற்றுள்ளனவா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். இந்த அழைப்புகள் அங்கீகரிக்கப்படாதவை அல்லது திசைதிருப்பக்கூடியவை என்றால், பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் குறித்து 1950 மற்றும் 1800 425 1950 ஆகிய உதவி எண்களில் புகார் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட புகார்களின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் காலத்தில் அடையாளம் தெரியாத அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/election-commission-new-advice-for-people-election-poll-update-in-tamil-11451573





