திங்கள், 14 மார்ச், 2016

1.20 கோடி பேருக்கு கண் அழுத்த நோய்:நிபுணர் தகவல்

Morgagnian-Cataract-1smநாட்டில் 1.20 கோடி பேர் கண் அழுத்த நோயால் (கிளக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண் சிகிச்சை நிபுணர் ரவிசங்கர் தெரிவித்தார்.
உலக கண் அழுத்த நோய் தினத்தையொட்டி, ராஜன் கண் மருத்துவமனை சார்பில் சென்னை தியாகராய நகரில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், டாக்டர் ரவிசங்கர் பேசியது:
கண்களில் ஏற்படும் அழுத்தம் அதன் நரம்புகளைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்துவதே கண் அழுத்த நோயாகும். இந்த நோயினால் நாட்டில் 1.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆரம்ப கட்டத்தில் கண் அழுத்த நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரியாது. நோய் முற்றிய சமயத்தில்தான் அதன் அறிகுறிகள் தெரியும். பார்வையின் அளவு சுருங்குதல், விட்டு விட்டு தலை வலித்தல், ஒளிவட்டம் போன்று தோன்றுதல், கண் சிவத்தல் உள்ளிட்டவையே கண் அழுத்த நோயின் அறிகுறிகளாகும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 200 பேருக்கு ஒருவருக்கு கண் அழுத்தநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்டுக்கு ஒருமுறை கண்ணின் அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருந்துகளின் மூலமாக குணமாக்க முடியும். இல்லையெனில், லேசர் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு கண் அழுத்த நோய்க்கான பரிசோதனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.