வெள்ளி, 18 மார்ச், 2016

3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் ஏற்றுமதி


bagகடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னையில் வியாழக்கிழமை அவர்கள் கூறியது: இந்தியாவில் மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு, சணல் உற்பத்தியில் 84 ஆலைகள் செயல்படுகின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2.2 லட்சம் பேர் பயன்: சணல் உற்பத்தி செய்வதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக செயல்படுகின்றனர். அதோடு, 300-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உள்ளனர். அவர்களின் மூலம் சணல் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.600 கோடிக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
அதோடு, தரைவிரிப்புகள், பைகள், பரிசுப் பொருள்கள், அலங்கார பொருள்கள் என ரூ.1,350 கோடிக்கு இந்திய சணல் வாரியம் விற்பனை செய்துள்ளது.
20-ஆம் தேதி வரை கண்காட்சி: சணல் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டுதோறும் 30 சணல் பொருள்கள் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மேலும், சணல் உற்பத்தியாளர்களுக்கு அரங்குகளும் அமைத்துத்தரப்படுகின்றன. இது, வாடிக்கையாளர்கள் நேரடியாக சணல் பொருள்களை வாங்குவதற்கு உதவுகிறது.
தற்போது, வரும் 20-ஆம் தேதி வரை 4 நாள்கள் (காலை 10 முதல் இரவு 8 வரை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மாளிகையில், சணல் பொருள்கள் விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.
இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சணல் பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன என்று சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.