ஞாயிறு, 20 மார்ச், 2016

கனவை நனவாக்கும் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு என்றுமே மவுசுதான்!


ld4003புறநகர் பகுதிகளே பலருக்கு  வீடு வாங்குவதற்கு  சொத்து வாங்குவதற்கு  சாத்தியமாக அமைந்திருப்பதால் அங்கு தங்கள் வசிப்பிடத்தை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதிகள்  நன்கு வளர்ச்சி பெற்று வருகின்றன. அதனால் ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்தவீட்டு கனவை நனவாக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். புறநகரை அடுத்துள்ள  பகுதிகளில் தான் வீட்டு மனைகளையே காண முடிகிறது.  

சென்னை நகரில் இருந்து புறநகர் வெகு தொலைவில் இருப்பதாக கருதினாலும் விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. இதனால், நமக்கு ஏற்ற ஏதாவது ஒரு இடத்தில் வீடு வாங்குவது, எதிர்காலத்தில் பெரிதும் கைகொடுக்கும். அதிகரித்து வரும் வீட்டுவாடகை, வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் எண்ணற்ற நிபந்தனைகள், வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீடு வாங்கும் நிர்பந்தத்துக்கு  தள்ளி விடுகின்றன. 

இவர்களை தவிர்த்து வசதி வாய்ப்புகள் அதிகரித்து அல்லது நல்ல சம்பளத்தில் வேலை  கிடைத்து வீடு வாங்குபவர்களும் உள்ளனர். வருமான வரி கட்டுவதை  கருத்தில்கொண்டு அதற்கேற்ப தி்ட்டமிட்டு வீடு வாங்குபவர்களும் இன்னொரு ரகம். தகவல் தொழில்நுட்பத்துறை உச்சத்தில் இருந்தபோது  சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் மனைகள் , தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

பொறியியல் முடித்ததும் மிக இளம் வயதிலே கைநிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும் சூழல் உருவானபோது, இந்த இளம் பணியாளர்களை குறிவைத்து ரியல்  எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பெரிய பட்ஜெட் வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டினர்.  மாதம் ரூ1 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வங்கியில் ரூ50 லட்சம், ரூ60 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்குவதற்கு தயங்கவும் இல்லை, சிரமப்படவும் இல்லை. 

இது ஒரு புறம் இருக்க வீடு வாங்குவது பாதுகாப்பான முதலீடாகவும் பலர் கருதினார்கள். இதனால் பெரிய பட்ஜெட் வீடுகளுக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மவுசு கூடியது. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஐடி நிறுவனங்களை ஒட்டிய இடங்களில் விண்ணை முட்டும் வானளாவிய குடியிருப்பு கட்டிடங்கள்  அதிக அளவில் கட்டப்பட்டன. 

ஆனால்  பொருளாதார சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கேற்ப துறையில் ஏற்பட்ட திடீர் சரிவு, பொருளாதார மந்த நிலை, ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, தமிழக அரசின் வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள்  ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையின்  வேகத்துக்கு தடையாக வந்தன. பெரிய பட்ஜெட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்தவர்கள் கூட நிதி நெருக்கடி காரணமாக பின்வாங்கினார்கள். 

ரியல்  எஸ்டேட் துறையில் சமநிலை நீடிக்காததால் முதலீடு செய்யும்  ஆர்வம் குறைந்தது. மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில்  வேலை செய்யும் ஊழியர்களின்  ஊதியம் குறைந்தது, அவர்களின்  வீடு வாங்கும் மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது எனலாம்.  இதன் தாக்கம் கட்டுமான துறையில் பிரதிபலித்தது. 2012ம் ஆண்டு இறுதி வரை கட்டப்பட்ட சொகுசு வீடுகள் பலவற்றை விற்க முடியாமல்  கட்டுமான நிறுவனங்கள்  திணறின.  

சென்னை நகரின் மையப்பகுதியில் ரூ70 முதல் ரூ80 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள்,  அடுக்குமாடி வீடுகளை சாதாரணமாக வாங்க முன்வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. இதன் பின்னர் அதிக விலையில் சொகுசு வீடுகள், தனி வீடுகளை கட்டுவதற்கு பல கட்டுமான நிறுவனங்கள் தயக்கம் காட்டின. இதன் காரணமாக ஆடம்பர வீடுகள், சொகுசு வீடுகள் கட்டுவதற்கு  ஆர்வம் காட்டி வந்த கட்டுமான நிறுவனங்கள் தங்கள் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தொடங்கின. 

சுமார் 70 சதவீதம் வீடுகள் நடுத்தர குடும்பத்தினர் விரும்பும் குறைந்த பட்ஜெட் விலை வீடுகளே  என்ற நிலை உருவானது. இதனால் தற்போது புறநகர் பகுதிகளில் குறைந்த சதுர அடியில் தனித்தனி வீடுகள் கட்டுவது அதிகரித்து வருகிறது.  இதனால் ரூ30 முதல் ரூ40 லட்சம் மற்றும் அதற்கு குறைவான விலையுள்ள பட்ஜெட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காடடுகின்றனர்.  

பொதுவாகவே எல்லாருக்கும் சொந்தவீடு வாங்கவேண்டும் என்ற கனவு இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ4 முதல் 5 லட்சத்துக்கு நிகராக வாங்குவோருக்கு தான் இந்த ஆர்வம் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு வீட்டுக்கடன்களை வாரி வாரி வழங்கவும்  அனைத்து வங்கிகளும்  போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன. இதனால் தற்போது 550 சதுர அடி முதல் 700 சதுரஅடி வரை குறைந்த  பரப்பளவிலான வீடுகளை கட்டுமானத்துறையினர்  கட்டி வருகின்றனர். 

ஒரே மாதிரி  சிறிய சிறிய வீடுகளை கட்டி விற்பனை செய்கின்றன. 3 படுக்கை அறை கொண்ட வீடுகள், ஆடம்பர வீடுகள், சொகுசு வீடுகளை கட்டுவதை கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்டத்தக்க அளவில் குறைத்துக்கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை புறநகர்  பகுதிகளில் குறைந்த பட்ஜெட் அளவில் வாங்க கூடிய வகையில் ஓரளவு வசதி கொண்ட வீடுகள் அதிக அளவு கட்டப்பட்டு வருகின்றன. எனவே இதுபோன்ற நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கு என்றுமே மவுசுதான். ஏனென்றால், இவைதான் நடுத்தர மக்களின் வீட்டுக்கனவை நனவாக்குகின்றன.