சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்!
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஒரு மித்த குரலில் வலியுறுத்தமுடியும். மேலும் இஸ்லாமிய சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டியவற்றை பெற வலியுறுத்தமுடியும் என்று அழைப்பு விடுத்திருந்தோம்.
ஆனால் இஸ்லாமிய பணக்காரர்கள் சிலர் தங்கள் சுயநலத்துக்காக எங்களை ஒற்றுமையாக சேரவிடாமல் தடுக்கின்றனர். இஸ்லாமிய அரசியல் கட்சியினரும் வெவ்வேறு காரணங்கள் கூறி ஒன்றாக இணைய மறுக்கின்றனர். ஆகையால் ஒன்றாக இணையாமல் பிரிந்து போட்டியிடும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்கள் கட்சியை சேர்ந்த படித்த இளைஞர்களை நிறுத்தி தோற்கடிப்போம்.
சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம் என்று அறிவிக்கும் கட்சியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.