புதன், 3 ஆகஸ்ட், 2016

வாழை மருத்துவம்


மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.
மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை.
ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.
சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.
வாழைப்பழத்திற்கு இளக்கும் தன்மை உண்டு. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை உள்ளன. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன்.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.
சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.
சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.
இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.