ஓடிஸாவின் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள இரும்பு நகரமான ரூர்கேலாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான நாளா ரோட் பகுதியில் வைத்து ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களில் பெரும்பான்மையினர் குடி போதையில் இருந்ததாகவும் அவர்களின் பின் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பின்னர் இந்த கலவரக்கார்கள் சிறுபான்மை சமூகத்தினரின் வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலகட்டத்தில் இப்பகுதியில் இப்படியான நிகழ்வு நடப்பது இது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சில விஷமிகள் ஆட்சேபணைக்குரிய வாட்ஸ்அப் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ரூர்கேலா பகுதியில் 1964ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 800 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source: Kaalaimalar