சனி, 17 செப்டம்பர், 2016

குர்பானி கழிவுகளை அகற்றிச் சென்ற மதரஸா ஆசிரியர் மீது தாக்குதல் காவிகளின் அட்டகாசம் தொடர்கிறது.

டில்லியில், ஹஜ் பெருநாள் முடிந்து குர்பானிக் கழிவுகளை அகற்றிச் சென்ற மதரஸா ஒன்றின் ஆசிரியர் மற்றும் வேன் ஓட்டுனர் ஆகியோர் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டில்லியின் கண்ஜாவாளா பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது IPC பிரிவு 308 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகே உள்ள ராணி கேரா மற்றும் ரசூல்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று டில்லி காவல்துறை துணை ஆணையர் விக்ரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நவீன், ராஜு, தேவேஷ் மற்றும் அபிஷேக் ஆகியோர் பசு பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனரா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக விக்ரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் இரவு, ஜாமியா ரெஹ்மானியா தாஜுரிதுள் குரான் மதரஸாவின் ஆசிரியர் முஹம்மத் காலித், அவரது மாணவர் அப்துஸ் சலாம், மற்றும் வேன் ஓட்டுனர் அலி ஹசன் ஆகியோர் குர்பானி கழிவுகளை அகற்றிச் சென்றுள்ளனர். அப்போது இரண்டு வாகனங்களில் வந்த நான்கு பேர் கம்பி கட்டைகளை கொண்டு இவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். தலையில் தொப்பியும் தாடியும் இல்லாதால் அப்துஸ் சலாம் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி இந்த தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதரஸாவின் பொதுச் செயலாளர் காரி முஹம்மத் லுக்மான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மதரசாவின் அருகே உள்ளவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஏற்கனவே மதரஸாவின் செயல்பாடுகளை தடுக்க முயன்றுள்ளனர் என்றும் அவர்களது பெயர்களை காவல்துறையிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

source: kaalaimalar