திங்கள், 12 செப்டம்பர், 2016

அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்


மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசி‌யல் சாசனம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அம்சங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அணைகளை ஆய்வு செய்வதற்கும், சீரமைப்பதற்கும் வழிவகை செய்யும் அணை பாதுகாப்பு அமைப்பு, முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மலைப்பிரதேசம், வனப்பகுதிகளில் இருக்கும் அணைகளில் சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தடையின்றி சென்று ஆய்வு நடத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையிலான அம்சத்தை மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அணைகளை பராமரிப்பது தொடர்பான மாநில அரசுகளின் சட்ட உரிமைகளை பாதிக்கும் வகையிலான பரிந்துரைகளை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டாட்சித் தத்துவத்தை நசுக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
ஆகையால், அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு எழுப்பியுள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிக்காமல் அவசரகதியில் மசோதாவை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
source: new gen media