பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் நில அதிர்வை உணர்ந்த மக்கள், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக பீதியடைந்து நள்ளிரவில் தெருக்களில் தஞ்சமடைந்தனர். ஆனால், நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்று இந்திய புவியியல் துறை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் எங்கும் இருள் கவிழ்ந்திருக்க, பெரம்பலூர் மாவட்டம் முழுமையுமாக ஆழ்ந்த நிசப்தத்தில் உறைந்திருந்தது. நள்ளிரவு 1.05 மணியளவில் லேசான நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதியடைந்து, வீதிகளில் கூடிவிட்டனர். பெரம்பலூர், துறைமங்கலம், கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, கவுள்பாளையம், பேரளி, நன்னை, லப்பைக்குடிகாடு, திருப்பெயர் உள்ளிட்ட இடங்களில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் அச்சம் விலகாத கண்களுடன் தெருக்களில் திரண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியிலும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் நள்ளிரவில் வீதியில் கூடிவிட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
வீதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூடியிருந்த மக்கள், நில அதிர்வை தாங்கள் உணர்ந்தது குறித்து ஒருவருக்கொருவர் அச்சத்துடன் பரிமாறிக் கொண்டனர். இயல்பு நிலை திரும்ப ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
பதிவு செய்த நாள் : September 11, 2016 - 07:52